ஞாயிறு, 3 ஜூலை, 2016

அப்துல் கலாம்

அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி என்பதை விட ஒரு இந்திய அரசு ஊழியர்.அரசின் திட்டங்களை,கனவுகளைச் சிரமேற்கொண்டு செய்யும் விஞ்ஞானி.அவரது ஒரே கண்டுபிடிப்பு இலகுரக போலியோ காலணி.இந்தியாவின் வல்லரசு கனவின்கருனை முகமாக முன்னெடுக்கப்பட்டவர்.ஓய்வுக்குப் பின் மாணவர்களை ஊக்குவிக்கும் தன்முனைப்பு ஆளுமை.அவ்வளவே.அவர் ஒரு சமூகப் போராளியோ தியாகியோ அல்ல.அவருக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருப்பது இந்திய அரசின் அப்துல் கலாம் பிம்பக் கட்டமைப்பின் வெற்றியே.

01 அக்டோபர் 2015

கடந்த வாரத்தில் சென்னை சுங்கத்துறை இணைய தளம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் முடக்கப்பட்டது என்ற செய்தி நாளிதழ்களில் வெளியானது.பல ஆண்டுகளுக்கு முன்பே சீன அரசு அவர்களின் அரசாங்க கணிப்பொரிகளில் விண்டோஸ்க்கு பதிலாக லினக்ஸ் இயக்குதளத்தை உபயோகிபதாக முடிவு செய்தது.லினக்ஸில் உள்ள கூடுதல் வசதி என்னவெனில் உங்களுக்கான பாதுகாப்புச் சுவற்றை (Fire wall)நீங்களே வடிவமைத்துக் கொள்ளலாம்.இதனால் வேறு நாடுகளிலிருந்தோ அல்லது தனது நாட்டிலோ அரசு கணிணியை ஊடுருவ இயலாது.அப்போது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூட இனிமேல் நாட்டில் திறந்த மென்பொருளைப் பயன்படுத்த ஊக்குவித்து ஓர் அறிக்கை வெளிய்ட்டார்.இதனை அடுத்து பில் கேட்ஸ் இந்தியா வந்து அரசியல் தலைவர்களையும் வர்த்தகர்களையும் சந்தித்தார்.அதன் விளைவாக ஹைதராபாத் நகரில் மைக்ரொசாப்ட்.தனது அலுவலதத்தைத் தொடங்கியது.உடனே அரசியல்வாதிகள் மற்றும் அறிவு ஜீவிகள் சிலர் பில் கேட்ஸை இந்தியா வர வைத்தது நமது வளரும் பொருளியல் என்று மார்தட்டிக் கொண்டனர்.அவர் வந்ததன் காரணம் தனது விண்டோஸ் இயக்குதளத்தை விட்டுவிட்டு நாம் எங்கு லினக்ஸுக்கு மாறிவிடுவோமோ என்ற பயம் தானே ஒழிய வேறில்லை.தற்போது நமது அரசு தனது கணிணிகளில் விண்டோஸ் இயக்குதளத்தையே பயன் படுத்துகிறது.அதன் விளைவே இத்தகைய ஊடிருவல்கள்.நாம் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் நம்த் அரசாங்க இரகசியங்கள் உளவுபார்க்கப் படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

தண்ணீர்

அசோகமித்திரனின் தண்ணீர் புதினம் வாசகனுக்கு ஓர் புதிய அகதரிசனத்தைத் தரும் அற்புதமானபடைப்பு.சென்னையின் தண்ணீர்ப் பிரச்சினையின் ஊடாக இந்த சமூக அமைப்பின் சகல அவலங்களையும் தனது எழுத்தின் வழியே நிகழ்த்திக் காட்டி விடுகிறார்.அரசின் மெத்தனம், அரசு அதிகாரிகளின் பிரச்சனை, பல ஆண்டுகளாக வேலை செய்தும் நிரந்தர வேலையற்ற கூலிகள்,மெல்லிய திரையின் பின்னால் தெரியும் நகரின் சாதிய அரிதாரம் பூசிய முகங்கள்,வாழ்வில் எந்த சுகமும் அறியாத டீச்சர்,அவளின் கொடுமைக்கார மாமியார் மற்றும் வயதான நோயாளிக் கணவன்,ஓர் சாதாரணக் குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கும் சாயா,தோல்வியினால் ஆசீர்வதிக்கப்பட்டுப் பின் தவறான வழியில் தனது வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க மனமின்றி அதனுடன் வாழ முடிவுசெய்து வாழ்வை நேருக்கு நேராக எதிர்நோக்கும் துணிவுள்ள ஜமுனா என இச்சிறிய புதினத்துக்குள் இத்தனை கதாபாத்திரங்கள் அதனதன் கதியில் உலவுகின்றன.இறுக்கமாய்க் கதை சொல்லும் பாணி அசோகமித்திரனின் தனித்துவம். என்னளவில் தமிழின் முக்கிய புதினங்களில் தண்ணீரும் ஒன்று.

மராட்டியத் திரைப்படம்

சமீபத்தில் ஒரு விமானப் பயணத்தின்போது Dr.பிரகாஷ் பாபா ஆப்தே என்ற மனிதரின் வாழ்வை ஒட்டி எடுக்கப்பட ஓர் மராத்தியத் திரைப்படத்தைக் காண நேர்ந்த்து.Dr.பிரகாஷாக நானா படேகர் நடித்திருந்தார்.சக உயிர்கள் மீது அன்பு செலுத்தும் ஒரு தம்பதியினரின் கதை தான் Dr.பிரகாஷ் திரைப்படம். அடர் காட்டினில் வாழும் பழங்குடியினருக்கு மருத்துவ உதவிகள் செய்வதற்காக புலம் பெயர்ந்து காட்டுக்குள் வாழும் சூழலிலிருந்து அந்தப் பகுதி ஒரு கிராம்மாக வளர்வதற்கு வித்திட்ட கதையைச் சொல்கிறது இப்படம். பழங்குடியினர், தந்தையின் உயிருக்காக சிசுவை பலி கொடுப்பதைத் தடுப்பதில் இருந்து தொடங்கும் பயணம் சில ஆண்டுகள் கழித்து வரும் முதல் நோயாளியின் நோயை அறிய முற்படுகையில் வரும் மொழிப் பிரச்சனையில் தொடங்கிப் பல பிரச்சினைகளை அத்தம்பதி வெற்றிகரமாக எதிர்கொண்ட கதை தான் இப்படம். படம் எடுக்கப்பட்ட விதத்தில் இயக்குனரின் முதிர்ச்சியின்மை பல இடங்களில் தெரிகிறது.பல இடங்களில் உணர்ச்சி ததும்பும் வசனங்களால் நிரப்பப்பட்டிருந்தன.ஓரிடத்தில் கூட காட்சி ஊடகத்தின் பலம் பிரயோகிக்கப்படவில்லை.மேலும் அரசுஅதிகாரிகள் பொது அறிவு அற்றவர்களாகவும்,அகம்பாவம் பிடித்தவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.இவற்றை எல்லாம் மீறி ஓர் உன்னதமான ஆளுமை குறித்த ஆவணப்படுத்துதல் என்ற வகையில் படத்தின் எல்லா குறைகளையும் பொறுத்துக்கொள்ள முடிகிறது.சக உயிர்களிடம் அன்பு செலுத்துகிற உயிரின் அடிப்படைக் குணத்தைக் கூட உன்னதமான என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் நமது சமூக அமைப்பு உள்ளது.முழுத் திரைப்படம்youtubeல் கிடைக்கிறது.
கோர்ட்
ஒரு நல்ல திரைப்படம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு கோர்ட் மராத்தியத் திரைப்படம் ஓர் மற்றுமோர் உதாரணம்.நீதிமன்றத்தின் அசட்டுத்தனங்களைச் சொல்வதோடு மட்டுமல்லாது அரசு தரப்பு பெண் வக்கீலின் நுகரும் கலாச்சாரம் மற்றும் அவர்களின் இரசனை பற்றிப் பேசுகிறது.அறுபத்திஐந்து வயது உடல் நலமில்லாக் கிழவரை ரிமாண்டில் வைத்துவிட்டு எந்த வித குற்றஉணர்வுமின்றி கோடைகால விடுமுறை செல்லும் நீதியரசர்,ஒரு சராசரி மனிதனின் மூட நம்பிக்கைகளோடும் பணம் குறித்தான சிந்தனைகளோடும் இருக்கிறார்.அவரது குட்டித் தூக்கத்தைக் கெடுக்கும் சிறுவனின் மீது வன்முறையைப் பிரயோகிக்கிறார்.அத்துடன் படம் நிறைவு பெறுகிறது.
குற்றம் நிகழும் தருணத்தில் குற்றவாளியின் அக கொந்தளிப்பயும் புற விஷயங்கள் அக்குற்றத்தின் மீது செலுத்தும் தாக்கமும் அற்புதமாய் வார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் தான் குற்றம் கடிதல்.நான் சமீபத்தில் பார்த்த சில நல்ல தமிழ்த் திரைப்படங்களில் ஒன்று.ஆனால் இந்த திரைப்படமும் காக்கா முட்டையும் ஒரே நேரத்தில் வெளியானது.காக்கா முட்டைக்குக் கிடைத்த வரவேற்பு இந்த திரைப்படத்திற்கு இல்லை.அதற்குக் காரணம் காக்கா முட்டையின் தயாரிப்பாளர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.தரம் எனப் பார்க்கும்போது குற்றம் கடிதல் காக்கா முட்டையை விஞ்சி நிற்கிறது.குற்றம் கடிதல்
இராவுத்தர்
வீட்டுத் திருமணத்திற்கு
காத்திருக்கும்
கயிற்றால் கட்டப்பட்டு
இலைகளை
மேய்ந்துகொண்டிருக்கும்
ஆடு.